முருகன் வழிபட்ட செங்கல்பட்டு மாவட்டம் தையூர் முருகீஸ்வரர் கோவில்

 முருகன் வழிபட்ட செங்கல்பட்டு மாவட்டம் தையூர் முருகீஸ்வரர் கோவில்

 
அருள்மிகு முருகீஸ்வரர் திருக்கோவில்
தையூர்-603103 
செங்கல்பட்டு மாவட்டம் 

இருப்பிடம்: 
கேளம்பாக்கம் 5 கிமீ, திருப்போரூர் 8 கிமீ, சென்னை சென்ட்ரல் 40 கிமீ, செங்கல்பட்டு 32 கிமீ, மகாபலிபுரம் 12 கிமீ 

மூலவர்: முருகீஸ்வரர், அழகிய சொக்கநாதர்
அம்மன்: மரகதாம்பிகை
நாயகர்: தைக்கஜ முருகன் (மணல் கல்லால் ஆனது)

தலமகிமை:
காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் அடுத்த தையூரில் மரகதாம்பிகை சமேத முருகீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் மூலவராக முருகீஸ்வரரும் தாயாராக மரகதாம்பிகையும் அருள்பாலிக்கின்றனர். கோவில் கல்வெட்டுகளில் அழகிய சொக்கநாதர் என்று அழைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இங்குள்ள முருகன் சிலை (தைக்கஜ முருகன்) மணல் கல்லால் ஆனது என்பது சிறப்பம்சமாகும்.

தையூரில் உள்ள திருக்குளத்தில்  முருகப்பெருமான் நீராடி தந்தை முருகீஸ்வரனை வழிபட்டுச் சென்றதாகப் புராணங்கள் கூறுகின்றன. இதனால் தையூர் கோவில் முருகன் வழிபட்ட சிறப்பான தலமாகக் கருதப்படுகிறது. தெப்பக்குளத்தில் முருகனே நீராடியதால் தீராத வியாதிகள் தீரும், பில்லி, சூனியம் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. முருகப்பெருமான் வழிபட்ட தலம் என்பதால் காளஹஸ்தி சென்று ராகு, கேது தோஷம் கழிப்பது போன்ற பலன் இக்கோவிலில் வழிபடுவதால் கிடைப்பதாகக் கூறப்படுகிறது. 
தையூர் கோவிலில் உள்ள முருகப்பெருமான் சுயம்புவாக காட்சி தருகிறார். மற்ற கோவில்களைப் போன்று அல்லாமல் சண்டிகேசுவரர் முருகன் சந்நிதியில் அமர்ந்திருப்பது சிறப்பம்சமாகும். இவ்வாலய விநாயகரை உருமிற்று விநாயகர் என்ற பக்தர்கள் அழைக்கின்றனர். இது போன்ற விநாயகர் சிலையானது ஜப்பானில் உள்ள புத்த மடாலிகத்தில் மட்டுமே உள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
மாமரம் தல விருட்சமாக விளங்குகிறது. குழந்தை பேறு இல்லாதோர் இங்கு வந்து வேண்டிக் கொண்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. தையூர் கோவிலுக்கு வந்து முருகீஸ்வரரை மனமுவந்த வணங்கினால் திருமணத் தடை நீங்கும் என்றும், சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. வைகாசி விசாகத்தன்று இறைவன்-இறைவி திருக்கல்யாணம் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.  ஐப்பசி அன்னாபிஷேகம், திருக்கார்த்திகை தீபம் (இன்று 6.12.2022), மார்கழி திருவாதிரை, தைப்பூசம் நாட்களில் முருகீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகிறது.
தல வரலாறு:
முருகப்பெருமான், திருப்போருரிலே தாரகாசுரனுடன் வான் மார்க்கமாக போரிடுவதற்கு முன்பாக, இங்கு வந்து தையூர் திருக்குளத்தில் நீராடி  சிவபெருமானை வழிபட்டதாகத் தலவரலாறு தெரிவிக்கிறது. 

கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணிக்கு பல ஆண்டுகளாக குழந்தை பாக்கியம் இல்லை. ஓரு நாள் அந்தப் பெண்ணின் கனவில் தோன்றிய மரகதாம்பிகை அவர்கள் தையூருக்கு வந்தால், தான் குழந்தை வரம் தருவதாக அருளியிருக்கிறாள். அப்பெண்ணுக்கோ, அவளின் குடும்பத்தினருக்கோ தையூர் எங்குள்ளது என்றே தெரியவில்லை. மூன்று மாத காலம் தேடி ஒரு வழியாக இந்த ஆலயத்திற்கு வந்திருக்கின்றனர். இங்கு வழிபட்டுச் சென்ற ஓர் ஆண்டில் அப்பெண்ணுக்கு இரட்டைக் குழ்ந்தைகள் பிறந்தன. பின்னர் குழந்தைகளுடன் ஆலயத்துக்கு மீண்டும் வந்து, நடந்த அற்புதங்களை எல்லாம் கூறிச் சென்றாள் என்கிறது வரலாறு.

தல அமைப்பு:
ஆலய முகப்பில் உள்ள மண்டபத் தூணில் முருகன் மயில் மீது ஏறி, வில் அம்போடு போர் புரிய புறப்படும் புடைப்புச் சிற்பம் காணப்படுகிறது. பிற்கால பல்லவர்கள் காலத்தில் இவ்வாலயம் கட்டப்பட்டதற்குச் சாட்சியாக, இங்கிருக்கும் பிள்ளையார், சண்டிகேஸ்வரர் திருமேனிகள் காட்சியளிக்கின்றன. விநாயகர் பின்னிரு கரங்களில் மழுவும் தந்தமும் ஏந்தி, முன்னிரு கரங்களில் ஏடும், மோதகமும் கொண்டு வீற்றிருக்கிறார். இவரின் பீடத்தில் `ஶ்ரீஉருமேற்று' என்ற வாசகம் காணப்படுகிறது. இது `கடுமையான இடி' என்ற பொருளைத் தருவதாகக் கல்வெட்டு அறிஞர்கள் கருதுகிறார்கள். எனவே விநாயகரை உருமிற்று (உருமேற்று) விநாயகர் என்று பக்தர்கள் அழைக்கின்றனர். இது பல்லவர்களின் பட்டப் பெயரான `பகாபிடுகு' என்னும் சொல்லைக் குறிக்கக் கூடும். பிராகாரத்தில் புத்தம் புதிய கொடிமரம் ஜொலிக்கிறது. வெளிப்புறச் சுவர்கள் முழுவதும் நாயக்கர் பாணி குறுஞ்சிற்பங்கள் மிக அழகாக காட்சியளிக்கின்றன. காரைக்கால் அம்மையார், கண்ணப்ப நாயனார், கிராத அருச்சுனர் போர் புரிதல், பீமன் மற்றும் வியாக்ரபாதரின் சரித்திரம் செதுக்கப்பட்டுள்ளது. மேலும் யானை, பசு, கடகம், பார்வதி தேவியார், முருகன் ஆகியோர் இறைவனை வணங்கும் காட்சிகளும், தேவார முதலிகளும், அரசர்களும் காணப்படுகின்றனர்.

கருவறையில் மூலவர் முருகீஸ்வரர், கிழக்கு நோக்கி காட்சியளித்து அருள்பாலிக்கிறார். விஜயநகர காலம் (15-ம் நூற்றாண்டு) முதல் இவர் முருகீஸ்வரமுடைய நாயனார் என்று வழங்கப்படுகிறார். கருவறை முகப்பில் இருபுறமும் குறுஞ்சிற்பங்கள் காணப்படுகின்றன. இவற்றில், ஆலயத்தில் நந்தா விளக்கு வைத்தவர்களின் உருவங்களும் செதுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. விமானம் ஒரு கோபுரத்தைப் போல் மூன்றடுக்கு கொண்டதாக விளங்குகிறது. அம்பாள் மரகதாம்பிகை, தனிச் சந்நிதியில் அருள்கிறாள். 

மகா மண்டபத்தில் நடுநாயகமாக மணல் கல்லாலான முருகப்பெருமான் காட்சியருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். மணல் கல்லுக்கு `தைஜகம்' என்று ஒரு பெயருண்டு. இதனாலேயே இவ்வூருக்கு இந்தப் பெயர் வந்ததாகச் தெரிவிக்கின்றனர். சண்டிகேஸ்வரர், தேவியருடன் முருகன், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, துர்க்கை, காலபைரவர், சூரியன் ஆகியோர் அருள்கின்றனர்.

திருவிழா:
திருக்கார்த்திகை தீபம், ஐப்பசி அன்னாபிஷேகம், மார்கழி திருவாதிரை, தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், தேய்பிறை அஷ்டமி

பிரார்த்தனை:
திருமணத் தடை அகல, குழந்தைப்பேறு வேண்டி, சகல சௌபாக்கியங்கள் அருள, தீராத பிணிகள் தீர, பில்லி, சூனியம், பயம் விலக, ராகு, கேது தோஷம் கழிக்க

நேர்த்திக்கடன்: 
அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்

திறக்கும் நேரம்:
காலை 7.30-9.30 மாலை 6-8

செங்கல்பட்டு மாவட்டம் தையூர் தைக்கஜ முருகனை மூலவர் மரகதாம்பிகை சமேத முருகீஸ்வரருடன் திருக்கார்த்திகை நாளில் வணங்கினால் தீராப் பிணிகள், பில்லி, சூனியம், பயம் அகலும்! 

வேலும் மயிலும் துணை! 
திருச்சிற்றம்பலம்





Comments

Popular posts from this blog

மதுரை மாவட்டத்தில் உள்ள ஜீவசமாதிகள்

நலம் தரும் நல்வாழ்வு தரும் நான்கு ராமேஸ்வரங்கள்

திருவாஞ்சியம் வாஞ்சிநாதசுவாமி கோயில்