திருப்போரூா் கந்தசுவாமி கோவில்


திருக்கோயில் வரலாறு:

திருப்போரூா் கந்தசுவாமி கோவில் என்பது இந்தியாவின் தமிழ்நாட்டின், செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் இருக்கும் ஒரு முருகன் கோயில் ஆகும். இக்கோயில் நகரின் மையத்தில் அமைந்துள்ளது. திருபோரூரானது பழைய மகாபலிபுரம் சாலையில் அமைந்துள்ளது.

திருப்போரூா் கந்தசாமி கோவிலை சுப்பிரமணிய சுவாமி கோவில் என்றும் கூறலாம். தமிழ் மொழியில் திருப்போரூா் என்ற தமிழ்ச் சொல்லின் பொருள் "புனிதப் போரின் இடம்" என்பது ஆகும்.

மூலவர் : கந்தசுவாமி

அம்மன்: வள்ளி, தெய்வானை

தல விருட்சம்: வன்னி மரம்

ஊர் : திருப்போரூர்

மாவட்டம்: செங்கல்பட்டு

மாநிலம்: தமிழ்நாடு

பாடியவர்கள்: அருணகிரிநாதர், சிதம்பர சுவாமி

வரலாறு :

இன்று இங்குள்ள கோயிலும் குளமும் முந்நூறு வருஷங்களுக்குள் உருவானவைதான். என்றாலும் இந்த இடத்தில் ஒரு பழைய முருகன் கோயில் இருந்திருக்க வேண்டும் எனப்படுகிறது. பல்லவ மன்னர்கள் காலத்திலேயே இந்தக் கோயில் எழுந்ததாக வரலாறு உள்ளது. பதின்மூன்றாவது நூற்றாண்டில் பதிவு செய்யப்பட்ட கல்வெட்டில், இவ்வூர் தொண்டை நாட்டில் ஆமூர் கோட்டத்தில் உள்ள ஜெயங்கொண்ட சோழ மண்டலம் என்று குறித்திருக்கிறது.

விக்கிரம சோழன் ஏற்படுத்திய நிவந்தங்களையும், விஜய கண்டதேவர் நந்தா விளக்குக்காகப் பொன் கொடுத்ததையும் அறிவிக்கும் கல்வெட்டுகள் எல்லாம் இங்குள்ள தெய்வயானையார் கோயில் சுவர்களில் சிதைந்து காணப்படுகின்றன. இவைகளே இக்கோயில் பழமையானது என்பதற்குச் சான்றுகள்.

இந்த ஊருக்கு அந்த நாளிலே சமரபுரி என்ற பெயரும் இருந்திருக்கிறது. இந்தக் கோயிலை விட, இங்குள்ள முருகனைப் பற்றிச் சிதம்பர சுவாமிகள் பாடிய 'திருப்போரூர் சந்நிதி முறை' என்ற பிரபந்தம் சிறந்த இலக்கியப் பிரசித்தி உடையது. இந்தக் கோயிலுக்குத் திருப்பணி செய்தவரும் அவரே.

தல வரலாறு:

முருகப்பெருமான் அசுரர்களை எதிர்த்து நிலம், ஆகாயம், கடல் ஆகிய மூன்று பகுதிகளில் நின்று போரிட்டு வெற்றி கண்டார். அசுரர்களின் கர்மத்தை நிலத்தில் நின்று போரிட்டு திருப்பரங்குன்றத்தில் முருகப்பெருமான் அடக்கினார்.

அவர்களின் மாயையை கடலில் நின்று போரிட்டு திருச்செந்தூரிலே வெற்றி கண்டார். இவ்வகையில் அசுரர்களின் ஆணவத்தை விண்ணில் நின்று முருகப்பெருமான் அடக்கி, ஒடுக்கிய இடமே திருப்போரூர் திருத்தலம் ஆகும்.

அசுரர்களுடன் முருகப்பெருமான் போரிட்டபோது, மாய வித்தைகள் மூலம் மறைந்திருந்து அசுரர்கள் போர்புரிந்தனர். இதனை தனது ஞான திருஷ்டியாலும், பைரவரின் துணையோடும் கண்டறிந்து முருகப்பெருமான் சம்ஹாரம் செய்தார்.

இவ்வாறு மறைந்திருந்த அசுரர்கள், முருகப் பெருமானின் கண்களில் அகப்பட்ட இடமே இன்றும், கண்ணகப்பட்டு (கண் அகப்பட்டு) என்ற இடமாக திருப்போரூர் அருகில் உள்ளது.

இந்த ஊரில்தான் திருப்போரூர் கந்தசுவாமி திருக் கோயிலை, மதுரை மீனாட்சி அம்மன் திருவருளால் நிர்மாணித்த மகான் சிதம்பர சுவாமிகளின் திருமடம் அமைந்துள்ளது.

ஒருமுறை சிதம்பர சுவாமிகள் தியானத்தில் அழகிய மயிலொன்று தோகை விரித்து ஆடுவதைக் கண்டு மகிழ்ந்தார். கூடவே மீனாட்சி அம்மன் தோன்றி, ‘சிதம்பரா! மதுரைக்கு வடக்கே, காஞ்சிக்கு கிழக்கே வங்க கடலோரம் யுத்தபுரி என்னும் தலம் அமைந்துள்ளது அங்கே குமரக் கடவுளின் திருவுருவம் பனைமரக் காட்டிற்குள் புதையுண்டு கிடக்கிறது. 

அதைக் கண்டெடுத்து, அழகிய திருக்கோயில் நிர்மாணித்து பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்துவா அந்த ஆலயத்துக்கு வந்து வழிபடுபவர்களுக்கு வாழ்வில் சகல நன்மைகளும் கிட்டும்’ என்று அருளி மறைந்தார்.

மதுரையில் இருந்து மீனாட்சி அம்மன் காட்டிய திசையில் பயணித்து, யுத்தபுரி, சமராபுரி, போரிநகர் என்றெல்லாம் அழைக்கப்படும் திருப்போரூரை அடைந்தார் சிதம்பர சுவாமிகள். 

அப்போது அங்கு ஒரு வேம்படி விநாயகர் ஆலயம் மட்டுமே இருந்தது. இறுதியில் ஒரு பெண் பனை மரத்தின் அடியில் சுயம்பு மூர்த்தியாக கந்தப்பெருமான் காட்சியளிப்பதைக் கண்டு மகிழ்ந்தார்.

சுயம்பு முருகப்பெருமானை அங்குள்ள வேம்படி விநாயகர் கோயிலில் வைத்து பூஜைகள் செய்து வந்தார். ஒரு நாள் அந்த சுயம்பு வடிவ கந்தப்பெருமானின் உருவில் இருந்து முருகப்பெருமான் தோன்றி, சிதம்பர சுவாமிகளின் நெற்றியில் திருநீறு அணிவித்து ‘சிவாயநம’ ஓதி மறைந்தார். 

அப்போது சிதம்பர சுவாமிகளுக்கு ஒரு கோயிலின் தோற்றமும், அதன் ஒவ்வொரு அங்கங்களும் துல்லியமாக மனத்திரையில் பதிந்தது. இது இறைவனின் திருவருள் என்பதை உணர்ந்தவர், மனதில் தோன்றிய கோயில் தோற்றத்தையே ஆலயமாக எழுப்பும் விதத்தில் திருப்பணி ஏற்பாடுகளை செய்யத் தொடங்கினார்.

அந்த காலத்தில் இந்தப் பகுதியை ஆண்ட ஆற்காடு நவாப் மன்னனின் மனைவி தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். அவர்கள் சிதம்பர சுவாமிகளின் தெய்வீக சக்தியை உணர்ந்து இங்கு வந்தபோது, நவாப் மனைவிக்கு திருநீறு பூச, அவரது வயிற்று வலி நீங்கியது. 

மகிழ்ச்சி அடைந்த நவாப் திருப்போரூரில் சிதம்பர சுவாமிகள் எழுப்பும் முருகன் கோயிலுக்காக 650 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கினார். கோயில் திருப்பணிகள் வேகமாக நடைபெற்று அழகிய திருக்கோயில் எழுந்தது. அதுவே இன்றைய திருப்போரூர் கந்தசுவாமி திருக்கோயில் ஆகும்.

ஆலயத்தின் தெற்கே அமைந்துள்ள திருக்குளமான ‘வள்ளையார் ஓடை’ என்னும் சரவணப் பொய்கையில் நீராடி, கிழக்குப் பார்த்த ராஜகோபுரத்தை வணங்கி உள்ளே நுழைந்தால் கருவறையில் முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். 

தொன்மக்கதை :

கந்த புராணக் கூற்றுப்படி முருகப்பெருமான் மூன்று இடங்களில் அசுரர்களை எதிர்த்துப் போரிட்டார். அவை முறையே திருச்செந்தூர், திருப்பரங்குன்றம்,திருப்போரூர் ஆகும். திருச்செந்தூரில் கடல் மார்கமாகவும், திருப்பரங்குன்றத்தில் நில மார்கமாகவும், திருப்போரூரில் ஆகாய வழியிலும் போரிட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்திருத்தலத்திலேயே முருகப்பெருமான் தாரகாசுரனை வென்றதாக நம்பப்படுகிறது.

பின்பு பல நாட்களாக இத்தலம் கவனிப்பாரற்றுக் கிடந்தது. திருக்கோவில் வரலாற்றுப்படி, முருகப்பெருமான் மதுரை மாநகரிலிருந்த சிதம்பரம் அடிகளாரின் கனவில் தோன்றியதாகவும், தான் திருப்போரிலுள்ள பனை மரத்தினடியில் கேட்பாரற்று இருப்பதாக கூறி மறைந்ததாகவும், கடவுள் உரைத்தபடியே சிதம்பரம் அடிகளார் திருப்போரூர் வந்தடைந்து முருகப்பெருமானின் சிலையை மீட்டெடுத்து திருக்கோவில் அமைத்ததாகவும் சொல்லப்பட்டுள்ளது. 

கோயில் அமைப்பு :

கருவறையில் உள்ள முருகன் கிழக்கு நோக்கியிருந்தாலும் கோயிலின் பிரதான வாயில் தெற்கு நோக்கியே இருக்கிறது. இந்த வாயிலைக் கடந்து, வெளிப் பிராகாரத்தில் உள்ள கோபுர வாயிலையும் கடந்தே முருகன் சந்நிதிக்குச் செல்ல வேண்டும் . மூல மூர்த்தி பனையடியில் புதைந்திருக்கிறார். ஆதலால் புற்றிடங் கொண்ட அந்தப் பெருமானுக்கும் அவன் துணைவியாருக்கும் புனுகுச் சட்டமே சாத்தி அலங்கரிக்கின்றனர். அபிஷேகம் கிடையாது, உருவங்களும் மொழு மொழு வென்றே இருக்கும்.

இந்த மூல மூர்த்திகளுக்கு முன்னால் மிகச் சிறிய வள்ளி தெய்வயானை சமேதனாகக் கந்தனை உருவாக்கி நிறுத்தி யிருக்கிறார்கள். இந்தக் கந்தன் கரங்களிலே உடம்பிடி, குலிசை முதலிய ஆயுதங்கள் இல்லை. தூக்கிய திருக்கரங்களிலே ஜபமாலையும் கமண்டலமுமே காணப்படுகின்றன. இங்குள்ள முருகன், பிரணவப் பொருள் அறியாத பிரமனைச் சிறையில் அடைத்த பின், தானே சிருஷ்டித் தொழிலை மேற்கொண்டிருக்கிறான்.

இங்கே வள்ளியையும் தெய்வயானையையும் உடன் உள்ளனர் என்றாலும், அவர்களுக்குத் தனித்தனிச் சந்நிதிகள் உள்ளன. இக் கோயிலில் இருபத்து நாலு தூண்களோடு கூடிய ஒரு பெரிய மண்டபம் இருக்கிறது. ஒவ்வொரு தூணிலும் ஒரு கையில் கேடயமும், ஒரு கையில் வாளும் உடைய நவவீரர் முதலியோரது உருவங்கள் உண்டு. இது போர் ஊர் அல்லவா? சூரபதுமனின் துணைவர்களான அசுரர்கள் போருக்கு எழுந்த போது, அவர்களை இங்குதான் சமர் புரிந்து வென்றார் என்பதுதானே வரலாறு. ஆகையால் சமரபுரி முருகன் சந்நிதியில் இவ்வீரர்களை யெல்லாம் உருவாக்கி நிறுத்தியிருக்கின்றனர்.

கந்தசுவாமி, சுயம்புமூர்த்தியாக (தானாகவே தோன்றியவர்) இருப்பதால் பிரதான பூஜைகள் செய்வதற்காக சுப்பிரமணியர் யந்திரம் பிரதிஷ்டை செய்துள்ளனர். எனவே இவருக்கு  அபிஷேகம் கிடையாது. கூர்ம (ஆமை) பீடத்தின் மேலுள்ள இந்த யந்திரத்தில், முருகனின் 300 திருப்பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. முருகனுக்கு பூஜை நடந்தபின், இந்த யந்திரத்திற்கு பூஜை நடக்கும்.

பிரம்மாவிற்குரிய அட்சர மாலை, கண்டிகை, சிவனைப்போல வலது கையால் ஆசிர்வதிக்கும் அபயஹஸ்த நிலை, பெருமாளைப்போல இடது கையை தொடையில் வைத்து ஊருஹஸ்த நிலை என மும்மூர்த்திகளின் அம்சமாக முருகன் விளங்குகிறார்.

ஆலயத்தில் சம்ஹார முத்துக்குமார சுவாமியின் திரு வடிவம் வலது காலை மயில் மேல் ஊன்றி, வில்லேந்திய திருக்கோலத்தில் உள்ளது. இந்த சம்ஹார மூர்த்தியை தொடர்ந்து 6 செவ்வாய்க்கிழமைகளிலோ அல்லது 6 சஷ்டி நாட்களிலோ சிவப்பு அரளி மாலை சூட்டி, பீட்ரூட் சாதம் நிவேதனம் செய்து, 6 நெய் தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் எதிரிகள், பகைவர்கள் தொல்லை விலகும்.

கோவில் வெளிப்பிரகாரத்தில் விநாயகர் சன்னிதிக்கு அருகில் சனீஸ்வரர், தனிச் சன்னிதியில் எழுந்தருளி உள்ளார். எனவே இத்தல விநாயகரையும், சனீஸ்வரரையும், கந்தசுவாமியையும், பைரவரையும் சனிக்கிழமைகளில் நல்லெண்ணெய் தீபமேற்றி தொடர்ந்து 8 சனிக்கிழமைகள் வழிபட்டு வந்தால், சகல சனி தோஷங்களும், மாந்தி தோஷமும் அகன்று விடும் என்று கூறப்படுகிறது.

இந்த கோயிலின் ஸ்தல மரம் வன்னி மரம் ஆகும். இக்கோயிலில் பைரவர் நாய் வாகனம் இல்லாமல் தனிச்சன்னிதியில் மூலவர் கந்தசுவாமியை பார்த்த வண்ணம் எழுந்தருளியிருப்பது சிறப்பு அம்சமாகும். 

#திருப்போரூர்
#கந்தசுவாமி

Comments

Popular posts from this blog

மதுரை மாவட்டத்தில் உள்ள ஜீவசமாதிகள்

நலம் தரும் நல்வாழ்வு தரும் நான்கு ராமேஸ்வரங்கள்

திருவாஞ்சியம் வாஞ்சிநாதசுவாமி கோயில்