முருகனுக்கு ஏன் காவடி எடுக்கிறோம் தெரியுமா?

ஒவ்வொரு தெய்வங்களையும் ஒவ்வொரு விதமாகவே வழிபட்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளோம். நம் முன்னோர்கள் எந்த வழிமுறைகளை பின்பற்றினார்களோ அதே வழிமுறைகளைத் தான் நாமும் பின்பற்றி நடக்கிறோம். 

முருகனுக்கு காவடி எடுத்தல், பால் குடம் எடுத்தல், மாலை அணிந்து பாத யாத்திரை செல்லுதல், விரதம் கடைபிடித்தல், மொட்டை போடுதல் என்று பலவற்றை கடைபிடித்து வருகிறோம்.

ஆனால், எதற்காக காவடி எடுக்கிறோம் என்று தெரியுமா?.... 

அகத்திய முனிவரின் சீடர்களில் ஒருவர் இடும்பன். அகத்திய முனிவரோ, தனது வழிபாட்டிற்காக கயிலைமலை சென்று அங்கு முருகனுக்கான கந்த மலையிலுள்ள சிவசக்தி சொரூபமான சிவகிரி, சக்திகிரி ஆகிய இரு மலைகளையும் கொண்டு வரும்படி இடும்பனிடம் கூறினார். இந்த இரு மலைகளையும் திருவாவின்ன்குடியில் நிலைபெறச் செய்யவும், இடும்பனுக்கு அருளவும் விரும்பி முருகன் திருவிளையாடலை நிகழ்த்தினார்.

அதற்காக, இடும்பனுக்கு வழி தெரியாமல் போகச் செய்தார். அதோடு, தான் குதிரை மீது செல்லும் அரசனைப் போன்று தோன்றி இடும்பனை ஆவினன்குடிக்கு அழைத்து வந்து சற்று நேரம் ஓய்வெடுத்துச் செல்லும்படி கூறினார். இடும்பனும் அவ்வாறே காவடியை இறக்கி வைத்து ஓய்வு எடுத்து பிறகு புறப்படும் போது காவடியை தூக்க முடியாமல் திண்டாடினான்.

ஏன் காவடியை தன்னால் தூக்க முடியாமல் போனது என்று சற்று சுற்றிப் பார்க்கும் போது சிவகிரியின் மேல் ஒரு சிறுவன் கோவணாண்டியாய் கையில் தண்டுடன் நிற்பதைக் கண்டான். அவனைக் கண்ட்தும், அவனை மலையிலிருந்து கீழே இறங்கும்படி வேண்டினான். ஆனால், அந்த சிறுவன் இந்த மலை தனக்கே சொந்தமானது என்று உரிமை கொண்டாடினான். இதனால் ஆத்திரமடைந்த இடும்பன், அச்சிறுவனை தாக்க முயன்றான்.

அப்போது இடும்பன் கீழே சரிந்து விழுந்தான். இதைக் கண்ட அகஸ்தியர் மற்றும் இடும்பன் மனைவியுடன் சென்று வேண்ட, முருகன் இடும்பனுக்கு அருளாசி புரிந்ததுடன் இடும்பனைத் தனது காவல் தெய்வமாகவும் நியமித்தார். 

அப்போது முருகன், இடும்பன் போல் காவடியேந்தி சந்தனம், பால், மலர் போன்ற அபிஷேகப் பொருட்களை தன் சன்னதிக்கு எடுத்து வருபவர்களுக்கு அருள் பாலிப்பதாக வாக்களித்தார். அப்போது முதல் முருகனுக்கு இந்த காவடி எடுக்கும் பழக்கம் வழக்கமாகி விட்டது. காவடி எடுப்பதுடன் பால் குடமும் எடுத்து வந்து முருகனுக்கு அபிஷேகம் செய்வது வழக்கம்.

ஒவ்வொரு முருகன் கோயிலிலும் முருகனுக்கு காவலாக இடும்பன் இருப்பதை காணலாம். வடபழனி முருகன் கோயிலில் இடும்பன் முருகனுக்கு காவலாக காட்சி தந்து கொண்டிருக்கிறார்.

ஓம் சரவண பவ

Comments

Popular posts from this blog

மதுரை மாவட்டத்தில் உள்ள ஜீவசமாதிகள்

நலம் தரும் நல்வாழ்வு தரும் நான்கு ராமேஸ்வரங்கள்

திருவாஞ்சியம் வாஞ்சிநாதசுவாமி கோயில்