வேழ மகளும் வேட மகளும்
வேழ மகளும் வேட மகளும்! முருகா சரணம்... 'கோதை குறமாது குணதேவமடமாது இரு பாலும் உற வீறிவரு குமரேசா’ (திருப்புகழ்) சிவபெருமானின் நெற்றிக்கண்ணிலிருந்து நெருப்புப் பொறிகளாக வெளிவந்து, ஆறு குழந்தைகளாக சரவணப் பொய்கையில் தவழ்ந்து, உமாதேவியார் எடுத்து அணைக்க, ஆறுமுகன் வடிவம் பெற்றான். அக்னி சொரூபனான முருகப்பெருமானிடம் மூன்று சக்திகள் உள்ளன. இச்சா சக்தி- வள்ளி (விழைவாற்றல்)- இகம் அளிப்பவள்; கிரியா சக்தி- தெய்வானை (செயலாற்றல்) பரம் கொடுப்பவள்; ஞான சக்தி- வேல் (அறிவாற்றல்) வீடுபேற்றை அருள்வது. இதில் வேலவனின் இச்சா சக்தியாகவும் கிரியா சக்தியாகவும் திகழும் வள்ளி- தெய்வானை குறித்த திருக்கதைகளும், தகவல்களும் தத்துவ ரஸம் மிகுந்தவை. ஒருமுறை, சிவனாரின் ஆனந்த நடனத்தில் லயித்து இன்புற்றிருந்த திருமாலின் கண்களில் ஆனந்த நீர் பெருகியது. திருமகளின் திருவருளுடன் அந்தக் கண்ணீர்த் துளிகள் இரண்டு பெண்களாக வடிவம் கொண்டன. விஷ்ணுவும் லட்சுமியும் அவர்களைத் தங்களின் மகள்களாக ஏற்று அமுதவல்லி, சுந்தரவல்லி எனப் பெயர் சூட்டி வளர்த்து வந்தனர். தந்தை திருமாலின் மந்திர உபதேசப்படி, அந்தப் பெண்கள் திருமுருகனை நோக்கித் தவம் ...