திருமலைத் தீர்த்தங்கள் :-

திருமலைத் தீர்த்தங்கள் :-

1) புஷ்கரணி தீர்த்தம்
தருமகுப்தன் என்ற இளவரசன், ஒரு முறை
அடர்ந்த காட்டினுள் வேட்டைக்குச் சென்றான். வேட்டையின் போது, இருள் சூழ்ந்த காரணத்தால், ஒரு மரத்தின் மீது ஏறி, ஓய்வெடுக்க முயன்றான்.

அச்சமயம் சிங்கம் ஒன்று கரடியைத் துரத்தி
வந்தது. சிங்கத்திடம் இருந்து தப்பிக்க கரடி
இளவரசன் இருந்த அதே மரத்தில் ஏறியது.
அதைக் கொல்ல வாள் ஏந்தியவனை, கரடி
கெஞ்சிய பாவத்தில் நோக்கியது. கருணை
மேலிட தன் வாளை உறையிலிட்டான்.

இருவரும் ஒருவர் மற்றவரைக் கொல்லாமல்,இரவின் ஒருபாதியில் ஒருவர்
அடுத்த பாதியில் மற்றொருவர் என விழித்து பாதுகாத்து, சிங்கத்திடம் இருந்து
தப்ப உடன்படிக்கை செய்தனர்.

அதன்படி, கரடியின் துடை மீது தலை வைத்து, இளவரசன் நன்கு உறங்கினான்.
இளவரசனைக் கீழே தள்ளினால், உன்னை உயிரோடு விடுவேன் என சிங்கம் சைகை
காட்டியது. துரோகம் செய்ய மனமின்றி
கரடி,  சிங்கத்தின் வேண்டுகோளை
மறுத்தது

பின் இரவில், கரடி உறங்க, இளவரசன் கண் விழித்தான். சிங்கம் மறுபடியும்,
இளவரசனை நோக்கி, கரடியைக் கீழே தள்ள சைகை செய்தது. அவ்வாறு செய்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள எண்ணி,
கரடியைக் கீழே தள்ளினான். கரடியோ, மரக்
கொம்பைப்பிடித்து தொங்கி உயிர்தப்பியது
"நன்றி கொன்றவனே, உன் மனமே உன்னைக் கொல்லும், நீ பித்துப் பிடித்து அலைக" என சபித்தது. கரடியின் சாபம்
பலித்தது.

தன் மகன் பித்துப் பிடித்து அலைவதைக் கண்ட அவனது தந்தை, அக்காட்டில் தவம் செய்து கொண்டிருந்த செமினி முனிவரிடம்
மகனுக்கான பரிகாரம் வேண்டினார்.
முனிவரும், தருமகுப்தன் திருமலையில்
உள்ள, புஷ்கரணியில் முழுகிச் செய்த
பாவத்திற்கு மனம் ஒன்றி மன்னிப்புக்
கேட்டால் பித்தம் நீங்கும் எனக் கூறினார்.
தருமகுப்தன் அவ்வாறு செய்து தனது பழைய நிலையை அடைந்து, மீண்டும் சிறப்பாக ஆட்சி புரிந்தான்.

2) குமார தாரை தீர்த்தம் :-
அந்தணன் ஒருவன் அவனுக்கு நினைவு
தெரிந்த நாள்முதல் இடைவிடாது திருமலை
வேங்கடவனை பூஜித்து வந்தான். மூப்பின் காரணத்தால் அவனது உடல் உறுப்புக்கள் வலுவிழந்து போனதால், ஒரு சீடனின் உதவியுடன் பூஜை செய்து வந்தார். ஒரு நாள் சீடன் காணாமற்ப் போய்விட்டான்.
கண் பார்வை சரியாகத் தெரியாததல் இருப்பிடம் திரும்ப இயலவில்லை. சீடனை
எவ்வளவு உரத்துக் கூப்பிட்டும் பலனில்லை
அப்போது சிறுவன் ஒருவன் அவர் முன்னே தோன்றி, "சாவுக்கு அஞ்சுவது ஏன் " எனக்
கேட்டான். அதைக் கேட்ட அந்தணர், "சாவுக்கு அஞ்சவில்லை. இறைப்பணிக்கு
தடை ஏற்படுமே என வருந்துகிறேன்", எனப்
பதில் அளித்தார். அதைக் கேட்ட சிறுவன்,
"குமார தாரைத் தீர்த்தத்தில் குளித்துப் பாரும், உமக்கு இளமை திரும்பும் ", எனக்
கூறி மறைந்தான். சிறுவன் வடிவில் வந்தது
பெருமாளே என்பார்கள். சிறுவன் கூறியபடி
குமார தாரைத் தீர்த்தத்தில் நீராடிய பின்
அந்தணர் இளமையை மீண்டும் பெற்றார்.

3) தும்புரு தீர்த்தம் :-
தும்புரு எனும் கந்தர்வன், ஓர் தீர்த்தத்தில்
மகிழ்ச்சியுடன் நீராடி வந்தான். ஒரு முறை
தன் மனைவியையும் தன்னுடன் நீராடி மகிழ அழைத்தான். அவளோ குளிரைக்
காரணம் காட்டி மறுத்து விட்டாள். கோபம்
கொண்ட கந்தர்வன், " தீர்த்தத்தின் அருகில் உள்ள அரசமரப் பொந்தில் தவளையாக
மாறி அவதிப் படுக",என மனைவியைச் சபித்தான். அச்சமயம் அங்கு வந்த முனிவர்
அகஸ்த்தியர்,அப்பெண்ணின்நற்குணத்தை
கந்தர்வனிடம் பக்குவமாக எடுத்துரைத்தார்.
அப்பெண்ணும், தன் செயலுக்கு வருந்தி, கனவனின் இச்சைப்படியே தீர்த்தத்தில்
நீராடி, தவளை உரு நீங்கி,சுய உருவத்தைப்
பெற்றாள்.

4) கபில தீர்த்தம்:-
மாதவன் எனும் அந்தண இளைஞன், பாண்டிச் செல்வி எனும் மங்கையை மணந்தான்.  இளமை வேகத்தில், ஆசையடங்காமல் அவளை பகல் ஒளியில் புணர்வதற்கு வேண்டிணான். அது தவறான செயல் என மறுத்தவளை, தன் வார்த்தை ஜாலத்தால் சம்மதிக்க வைத்தான்.

அவளும், "நீர் கொண்டு வரும் சாக்கில் நான் குளத்திற்கு செல்கிறேன், நீங்கள் வேள்விக்கு குச்சி எடுப்பதாகக் கூறி அங்கே வந்தால், நம் செயலை முடிப்போம்",
எனக் கூறினாள்.

மாதவனும் காமக் கிளர்ச்சியில் குளக்கரை
""செல்லும் வழியில், குந்தலை எனும் விலை
மகளைக் கண்டு மனம் பேதலித்தான். குளக்கரைக்கு சென்றவன், மனைவியிடம்,
" பகலில் புணர்வது பாவம் என்பது எனக்கு
தெரியும். உன்னைச் சோதிக்கவே நான்

அவ்வாறு கேட்டேன். நீ வீட்டிற்குச் செல்.
நானும் சற்று நேரம் கழித்து வருகிறேன்",
எனச் சொல்லி அவளை வீட்டிற்கு அனுப்பி
வைத்தான்.

பின்னர், விலைமகள் குந்தலையிடம் வந்து
தன் இச்சையைத் தெரிவித்தான். அவளோ,
"தங்கள் செயல் தர்ம சாஸ்திரத்திற்கு மிக விரோதமானது" என எடுத்துக் கூறியதுடன்
தன் மறுப்பையும் தெரிவித்தாள். ஆயினும்
காம வசப்பட்ட மாதவன், வலுக் கட்டாயமாக
அவளைப் புணர்ந்தான்.

"பாவம் செய்த நீ உன் குல தர்மத்தை விட்டு என்னை மணந்து கொள்", என குந்தலை
கூற மாதவனும்,சம்மதித்தான். குந்தலை
வேசித் தொழிலை விட்டு, நல்ல மனைவி ஸ்தானத்தில் மாதவனுடன் 12 வருட காலம்
குடும்பம் நடத்தினாள். விதியின் பொருட்டு குந்தலை இறக்க, மாதவன் பித்துப் பிடித்து ஊர் ஊராகச் சுற்றினான். அவ்வாறு,
திருமலை வந்து சேர்ந்தான். தன் தவறை
உணர்ந்து கபில தீர்த்தத்தில் மூழ்கி மனம்
தெளிவடைந்தான். மறு பிறவியில் மாதவன்
ஆகாசராஜன் என்ற மன்னராகப் பிறந்தான் என ஆன்றோர்கள் கூறுகிறார்கள்.

Comments

Popular posts from this blog

மதுரை மாவட்டத்தில் உள்ள ஜீவசமாதிகள்

நலம் தரும் நல்வாழ்வு தரும் நான்கு ராமேஸ்வரங்கள்

திருவாஞ்சியம் வாஞ்சிநாதசுவாமி கோயில்