தபஸ் குமாரஸ்வாமி
கந்தனருள் ஓங்கும் பொங்கு திருத்தலம் !
கொங்கணகிரி திருப்பூர் அருகில் சிறு குன்றின் மீது சுயம்புவாக, தபஸ் குமாரஸ்வாமியாக கந்தன் கோயில் கொண்டிருக்கும் அற்புதமான தலம். சுமார்1,200 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்தத் தலம், சித்தர்களில் ஒருவரான கொங்கணரால் இக்கோயில் நிர்மாணிக்கப் பட்டதாகவும் கூறுகிறார்கள்.
கருவறையில் வள்ளிதெய்வானை தேவியருடன் அருள்கிறார் முருகன்.
மூலவர் பிரதிஷ்டையின்போது யந்திர ஸ்தாபனம் விக்கிரகங்களுக்குக் கீழே பதிக்கப்படும். இக்கோயிலில் பீடத்திலேயே யந்திரங்கள் பதிக்கப்பட்டுள்ளன. 'ஸ்வாமி யந்திர ரூபமாக எழுந்தருளியுள்ளது, இந்தக் கோயிலின் சிறப்பம்சம்’ என்கிறார்கள் பக்தர்கள்
மேலும், மூலவர் முன் சமர்ப்பிக்கப்படும் பால் தானாகவே பொங்கும் அதிசயம், இக்கோயிலின் சாந்நித்தியத்துக்குச் சான்று. இதனாலேயே இத்தலத்தை பொங்கு திருத் தலம் எனப் போற்றுகின்றனர். மற்றோர் அற்புதம், குன்று முழுவதும் திகழும் பால (பாலை) மரம்.
இப்பகுதி மக்கள், சுபகாரியங்களில் இந்த மரத்தின் குச்சியை எடுத்துச் சென்று பிரதானமாகப் பயன்படுத்துகிறார்கள். இதனால் அந்த நற்காரியங்கள் இனிதே நடந்தேறும் என்பது நம்பிக்கை
கோயிலின் வாயு மூலையில் வேங்கடேச பெருமாள் சந்நிதி கொண்டிருக்கிறார். இப்படி, மருகனுடன் மாமனும் இருப்பது வெகு அபூர்வம். அதே போல் கன்னி மூலையில் செல்வ கணபதி, ஈசான மூலையில் தேவியருடனும் வாகனங்களுடனும் நவக்கிரக மூர்த்திகள் அருள்கின்றனர்.பரிபூரண கோலத்தில் அருளும் நவக்கிரகங்களைத் தரிசிப்பதால் கிரக தோஷங்கள் விலகும் என்பது ஐதீகம். செவ்வாய் தோஷ பரிகாரத் தலமாகவும் திகழும் இங்கு, சஷ்டி வழிபாடுகளும், செவ்வாய்க் கிழமைகளில் திரிசதி வழிபாடும் விமர்சையாக நடைபெறுகின்றன.
ஸ்தல விருட்சமாக வக்கனை மரம் திகழ்கிறது. பெண் மரமான இதன் அடியில் அருளும் சுயம்பு கந்தனையே சித்தர்கள் வழிபட்டார்களாம். ஆண் மரமான அரச மரம் வெளிப் பிராகாரத்தில் உள்ளது. திருமண தோஷம் உள்ளவர்கள் திருமணத் தடை நீங்க இம்மரத்தில் தாலிச் சரடு கட்டியும், புத்திர தோஷம் உள்ளவர்கள் இந்த மரத்தில் வளையல் மற்றும் தொட்டில் கட்டியும் வழிபட்டுச் செல்கின்றனர்.
Comments
Post a Comment