வேழ மகளும் வேட மகளும்
வேழ மகளும் வேட மகளும்!
முருகா சரணம்...
'கோதை குறமாது குணதேவமடமாது இரு
பாலும் உற வீறிவரு குமரேசா’
(திருப்புகழ்)
சிவபெருமானின் நெற்றிக்கண்ணிலிருந்து நெருப்புப் பொறிகளாக வெளிவந்து, ஆறு குழந்தைகளாக சரவணப் பொய்கையில் தவழ்ந்து, உமாதேவியார் எடுத்து அணைக்க, ஆறுமுகன் வடிவம் பெற்றான்.
அக்னி சொரூபனான முருகப்பெருமானிடம் மூன்று சக்திகள் உள்ளன. இச்சா சக்தி- வள்ளி (விழைவாற்றல்)- இகம் அளிப்பவள்; கிரியா சக்தி- தெய்வானை (செயலாற்றல்) பரம் கொடுப்பவள்; ஞான சக்தி- வேல் (அறிவாற்றல்) வீடுபேற்றை அருள்வது. இதில் வேலவனின் இச்சா சக்தியாகவும் கிரியா சக்தியாகவும் திகழும் வள்ளி- தெய்வானை குறித்த திருக்கதைகளும், தகவல்களும் தத்துவ ரஸம் மிகுந்தவை.
ஒருமுறை, சிவனாரின் ஆனந்த நடனத்தில் லயித்து இன்புற்றிருந்த திருமாலின் கண்களில் ஆனந்த நீர் பெருகியது. திருமகளின் திருவருளுடன் அந்தக் கண்ணீர்த் துளிகள் இரண்டு பெண்களாக வடிவம் கொண்டன. விஷ்ணுவும் லட்சுமியும் அவர்களைத் தங்களின் மகள்களாக ஏற்று அமுதவல்லி, சுந்தரவல்லி எனப் பெயர் சூட்டி வளர்த்து வந்தனர்.
தந்தை திருமாலின் மந்திர உபதேசப்படி, அந்தப் பெண்கள் திருமுருகனை நோக்கித் தவம் செய்தனர். அதனால் மகிழ்ந்த முருகன், அவர்கள் முன் தோன்றி ஆசியளித்து, அவர்களது விருப்பப்படி அவர்களைத் திருமணம் செய்துகொள்வதாக வரம் அளித்தார். அமுதவல்லியைத் தேவலோகத்திலும், சுந்தரவல்லியை மண்ணுலகிலும் பிறக்கும்படி கூறினார்.
அழகன் முருகனை ஆள வந்த அமுதவல்லி!
அமுதவல்லி தேவ உலகில் நீலோற்பல மலர்ப் பொய் கையில் குழந்தையாய்த் தோன்றினாள். தேவேந்திரனும் இந்திராணியும் அந்தக் குழந்தையைக் கண்டெடுத்து, மகளாக வரித்தனர். அங்கு அவளைச் சீராட்டி வளர்த்தது, தேவலோகத்து ஐராவதம் எனும் யானை. அதனால் தெய்வயானை (தெய்வானை)எனும் பெயர் பெற்றாள் அமுதவல்லி.
இந்த நிலையில், தேவர்களைத் துன்புறுத்திய சூரபத்மனை வென்று தேவர்களை சிறை விடுத்தார் முருகன். தேவேந்திரன் மகிழ்ந்து, தெய்வானையை முருகனுக்குத் திருமணம் செய்துகொடுத்தான்.
இடி, குலிசாயுதம், ஐராவதம் (வெள்ளை யானை), பொன்னுலகம் ஆகியவற்றுக்குச் சொந்தக்காரியானவள் தெய்வானை. இவள் 'முத்திமாது’- முத்தியைத் தருபவள். இவளுக்குக் 'கேவலி’ என்றும் பெயர் உண்டு. 'கேவலம்’ என்றால், கைவல்யத்தைத் தருபவள்; அதாவது, மேலான மோட்சத்தைத் தருபவள் என்று பொருள். முத்தியை அளிக்கவல்ல தெய்வானைக்கு முத்துமாலையும், இச்சையை நிறைவேற்றும் வள்ளிக்கு கடப்பமாலையும் அளிக்கிறான் முருகன் என்று போற்றுகிறார் அருணகிரியார்.
கிரியாசக்தியின் வடிவமானவள் தெய்வானை. செயலாற்றும் திறன்மிக்கவர்கள் புகழ் விரும்பாமல் அடக்கமாக இருத்தல்போல, தெய்வானையின் சிறப்பு, சான்றோர்களால் தனியாக நூல்களில் எடுத்துக் கூறப்பெறவில்லை. வடமொழியில் 'தேவசேனா’ என்றழைப்பர். 'சேனா’ என்ற சொல்லுக்குக் காப்பது என்பது பொருள். தேவர் குலத்தைக் காக்க வந்தவள் ஆதலால் தேவசேனா என்று பெயர் பெற்றாள்.
Comments
Post a Comment