திருப்பரங்குன்றம் முருகன் கோவில்


திருப்பரங்குன்றம் முருகன் கோவில் - முதல் படை வீடு

                                           

திருப்பரங்குன்றம் கோவில் அறுபடை வீடுகளில் முதல் படை வீடு ஆகும்.
247 தேவாரத் திருத்தலங்களில் ஒன்று ஆகும்.

                 நக்கீரர், அருணகிரி நாதர், பாம்பன் சுவாமிகள், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோர் இந்த தலத்தைப் பாடி உள்ளனர்.

                          இங்கு மூலஸ்தானத்தை ஒட்டி ஒரே குடவரையில் சுப்பிரமணியர், துர்க்கையம்மன், கற்பகவிநாயகர், மூவரும் அடுத்து                     அடுத்து உள்ளனர். கற்பகவிநாயகர் முன்பு இடப்புறம் சத்தியகிரீஸ்வரர் (சிவன்), மற்றும் சுப்பிரமணியர் முன்பு வலப்புறத்தில் பவளக்கனிவாய்ப் பெருமாள்,   என பஞ்ச தெய்வங்களும் மூலஸ்தானத்தை ஒட்டி ஒரே குடவரையில் இருப்பது வேறு எங்கும் காண இயலாத காட்சி அற்புத கட்சி ஆகும்.

திருப்பரங்குன்றத்தில் துர்க்கையம்மன் கொடிமரமும், ராஜகோபுரத்துடன் இருக்கிறாள். துர்க்கையின் சன்னதி எதிரிலேயே கொடிமரமும், கோபுரமும் இருந்து தலத்தின் சிறப்பை அதிகரிக்கின்றன. கருவறையில் துர்க்கைக்கு இடது புறம் கற்பக விநாயகர் அருளுகிறார். கையில் கரும்பு ஏந்திக்கொண்டு தாமரை மலர் மீது அமர்ந்து வித்தியாசமான கோலத்தில் காட்சி தருகிறார். இவரைச் சுற்றி பல ரிஷிகள் வணங்கியபடி இருக்கின்றனர். இதுவும் ஒரு சிறப்பு ஆகும்.

                 இந்த கோவிலில் கருவறைக்கு மேலே விமானம் இல்லாததால் மலையையே விமானமாக வணங்குகின்றனர். சிவபெருமானே மலை வடிவில் அருளுகிறார். திருப்பரங்குன்றம் கோயிலில் மகாமண்டபத்தின் முகப்பில் நந்திகேஸ்வரர், அவரது மனைவி காலகண்டியுடன் இருக்கிறார்.
திருப்பரங்குன்றத்தில் பிரகாரம் கிடையாது. சிவனே மலை வடிவமாக அருளுவதாலும், கோயில் குடவறையாக இருப்பதாலும் பிரகாரம் இல்லை. மலையைச் சுற்றி கிரிவலம் மட்டுமே செல்ல முடியும். அம்பாள் ஆவுடைநாயகி தனிச்சன்னதியில் தெற்கு பார்த்தபடி இருக்கிறார்.

இங்கு தான் சூரசம்ஹரத்தின் போது சுப்பிரமணிய சுவாமி வேல் வாங்குவார். இங்கு மட்டும் தான் முருகன் அமர்ந்த கோலத்தில் உள்ளார். மற்ற வீடுகளில் நின்ற கோலத்தில் அருளுகிறார். இங்கு தெய்வானையை மணம் முடித்த கோலத்தில் அருளுகிறார். அருகில் நாரதர், இந்திரன் ஆகியோர் உள்ளனர்.
பிரம்மா, நின்றகோலத்தில் வீணையில்லாத சரஸ்வதி, சாவித்திரி ஆகியோரும் உள்ளனர். சூரியன், சந்திரன், கீழே முருகனின் வாகனமான மயில் மற்றும் ஆடு உள்ளது. இது மற்ற தலங்களில் காணக் கிடைக்காத அபூர்வக் காட்சி ஆகும். சுப்பிரமணியரின் தரிசனம் காண்பதற்காக, தேவர்கள் மற்றும் மகரிஷிகள் வெண்ணிற மயில் வடிவில் இங்கு வசிப்பதாக ஐதீகம்.


சுப்பிரமணியர் கோயிலுக்கு எதிரே ஆதிசொக்கநாதராக அருளுகிறார். இங்கு இவர் தான் பிரதான மூர்த்தி ஆவார். விழாக் காலங்களில் இவருக்கு தான் கொடி ஏற்றப்படுகிறது. இருப்பினும் முருகனே சிவபெருமானின் வடிவம் என்பதால் அவரே வீதி உலா வருகிறார் என்பது இன்னொரு சிறப்பு ஆகும்.
மகாவிஷ்ணுவின் வாகனமாக கருடாழ்வார், அவருக்கு எதிரே வணங்கியபடி இருப்பார். ஆனால், இக்கோயிலில் மகாவிஷ்ணுவிற்கு எதிரே சிவன் இருப்பதால், கருடாழ்வார் சன்னதி இல்லை. அதற்குப் பதிலாக கருடாழ்வார், சண்முகர் மண்டபத்திலுள்ள கார்த்திகை முருகனுக்கு அருகில் வடக்கு நோக்கி இருக்கிறார்.

இங்கு சிவபெருமானுக்கு எதிரே பவளக்கனிவாய்ப் பெருமாள் மகாலக்ஷ்மியுடன் அமர்ந்த கோலத்தில் இருக்கிறார். சிவனுக்கு எதிரே நந்தி இல்லை, பெருமாளுக்கு எதிரே கருடன் இல்லை. மாறாக சிவனும் பெருமாளும் எதிர் எதிரே உள்ளனர். ஆகவே இதனை மால்விடை கோவில் என்று அழைப்பது இன்னொரு சிறப்பு.

இந்த பவளக்கனிவாய்ப் பெருமாள் தான் மதுரையில் நடைபெறும் மீனாக்ஷி திருக்கல்யாணம் அன்று சொக்கருக்கு தாரை வார்த்து கொடுக்கப் போவார்.
ஆரம்ப காலத்தில், திருப்பரங்குன்றம் கோயிலுக்கு பின்புறத்திலுள்ள தென்பரங்குன்றம் குடவறைக் கோயிலே பிரதானமாக இருந்திருக்கிறது. இக்கோயில் சேதமடைந்ததால், கோயிலை மறுபக்கத்திற்கு மாற்றி முருகப்பெருமானை வடக்கு திசை நோக்கி திருப்பி அமைத்திருக்கின்றனர். எனவே “திருப்பிய பரங்குன்றம்” என்றழைக்கப்பட்ட இவ்வூர் “திருப்பரங்குன்றம்” என்று மருவியது.

அருணகிரியார் தன் பாடல்களில் தென்பரன்குன்றுரை பெருமாளே என்று பாடுகிறார். இப்போதும் மூலவர் சிவன் தான். இவரை “சத்தியகிரீஸ்வரர்” என்று அழைக்கின்றனர். முருகன், தெய்வானையை திருமணம் செய்த தலம் என்பதால், முருகனுக்கு முக்கியத்துவம் தரப்பட்டு, சுப்பிரமணிய சுவாமி கோயிலாக மாறிவிட்டது. ஆறுபடை வீடுகளில் இங்கு மட்டுமே முருகனுக்கு அபிஷேகம் கிடையாது. புனுகு மட்டும் சாற்றப்படுகிறது.முருகன் குடைவரை மூர்த்தியாக இருப்பதால் இந்த ஏற்பாடு.

புரட்டாசி மாதம் கடைசி வெள்ளிக்கிழமையன்று முருகனிடம் உள்ள வேல், மலையிலுள்ள காசிவிஸ்வநாதர் கோயிலுக்கு கொண்டு செல்லப்படும்.
         
                                           
திருப்பரம்குன்றம் - கைலசா நாதர்

 அங்கு அபிஷேகம் நடக்கும். அறுபடை வீடுகளில் வேலுக்கு அபிஷேகம் நடக்கும் கோயில் இங்கு மட்டுமே ஆகும். வேலுக்கு முக்கியத்துவம் ஏன் என்றால் சூரனை ஆட்கொண்டு வெற்றி வேலுடன் முருகன் இங்கு வந்து அமர்ந்ததே ஆகும்.

சிவன், விநாயகர், முருகன் ஆகிய மூவருக்குமான வாகனங்கள் கொடிமரத்திற்கு அருகில் அமைந்துள்ளன. இங்குள்ள தெட்சிணாமூர்த்தி, இடது கையை தன் காலுக்கு கீழே உள்ள நாகத்தின் தலை மீது வைத்துள்ளபடி இருப்பது மற்றுமோர் சிறப்பு ஆகும்.

திருபரம்குன்றம் கோவிலுக்கு எப்படி செல்வது ?

          திருப்பரம்குன்றம் ரயில் நிலையத்திற்கு மிக அருகில் நடந்து செல்லும் தூரத்தில் உள்ளது. மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலுருந்து திருமங்கலம் செல்லும் பேருந்தில் ஏறி திருப்பரம்குன்றம்  கோவில் முன்பாக இறங்கி கொள்ளலாம். மதுரை இரயில் நிலையத்திலுருந்தும், பெரியார் பேருந்து நிலையத்திலுருந்தும் திருப்பரம்குன்றம் செல்லலாம். மதுரை விமான நிலையத்திலுருந்து அவனியாபுரம் வழியாக இந்த கோவிலை அடையலாம்.

Comments

Popular posts from this blog

மதுரை மாவட்டத்தில் உள்ள ஜீவசமாதிகள்

நலம் தரும் நல்வாழ்வு தரும் நான்கு ராமேஸ்வரங்கள்

திருவாஞ்சியம் வாஞ்சிநாதசுவாமி கோயில்