திருமுருகன்பூண்டி
திருமுருகன்பூண்டி - திருப்பூர்
முருகக்கடவுளின் பெயரிலேயே அமைந்த திருத்தலம் திருமுருகன்பூண்டி. திருப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்தத் தலம், முருகப்பெருமான் விரும்பி வந்து சிவவழிபாடு செய்த பெருமைக்கு உரியது. ஸ்ரீ மங்களாம்பிகையுடன் ஸ்ரீ மாதவனேஸ் வரர் கோயில் கொண்டிருக்கும் இத்தலத்துக்கு, இன்னும் பல புராணப் பெருமைகள் உண்டு.
தன் நண்பரான சேரமான்பெருமாள் தந்த பெருஞ்செல்வத்துடன் இவ்வழியே பயணித்துக் கொண்டிருந்தாராம் சுந்தரமூர்த்தி நாயனார். அவருடைய தெள்ளுதமிழ் பாடல்களைக் கேட்க விரும்பிய இறைவன், தமது திருவிளையாடலைத் துவக்கினார். வேடன் வடிவில் வந்து செல்வங்களை அபகரித்துச் சென்றார். இதனால் ஆத்திரமும் ஆதங்கமும் கொண்ட சுந்தரர், இந்தத் தலத்தின் கோயிலுக்கு வந்து பாடல்கள் பாடி இறைவனிடம் முறையிட, அவர் பறிகொடுத்த செல்வங்கள் மீண்டும் கிடைத்தன என்கிறது ஸ்தல புராணம்.
சிவனாரின் பிரம்மதாண்டவம் அரங்கேறிய தலமாகவும் இது கருதப்படுகிறது. வெகுநாட்களாக குழந்தை பாக்கியம் கிடைக்காது வருந்திய பாண்டிய மன்னன் ஒருவன், இங்கு வந்து வழிபட்டு குழந்தை வரம் பெற்றான். இதுகுறித்த சிற்பக் காட்சிகளை இங்கு தரிசிக்கலாம். இத்தலத்தைப் புதுப்பித்து வணங்கிய வேடன் ஒருவருக்கும் இங்கு சிலை உள்ளது. ஸ்ரீ லிங்கோத்பவர், ஸ்ரீ சண்டிகேஸ்வரர், ஸ்ரீ துர்கை, ஸ்ரீ தட்சிணாமூர்த்தி, சூரிய சந்திரர், ஸ்ரீ ஸ்ரீ்பைரவர், நவக்கிரகங்கள் ஆகிய தெய்வங்களையும் இங்கு தரிசிக்கலாம்.
கொங்கு மண்டலத்தில் சிறந்த கேது பரிகாரத் தலமாகவும் இது விளங்குகிறது. முனிவர் ஒருவரின் சாபத்துக்கு உள்ளான கேது பகவான், இந்தத் தலத்துக்கு வந்து துர்வாச தீர்த்தத்தில் நீராடி ஸ்ரீ மாதவனேஸ்வரரை வழிபட்டு சாபம் நீங்கப் பெற்ற தாக தலபுராணம் விவரிக்கிறது. எனவே, இங்கு வந்து வழிபடும் பக்தர்களுக்கு கேது தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை.
திருப்பூர் ரயில்நிலையத்துக்கு வடக்கே சுமார் 8 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது இந்தத் தலம். திருப்பூரில் இருந்து அவினாசி வழியாக கோவை செல்லும் எல்லா பேருந்துகளும் திருமுருகன் பூண்டியில் நிற்கும்.
நாகதோஷங்கள் நீங்கி வாழ்வில் நல்லன அனைத்தும் நிறைவேற, நீங்களும் ஒருமுறை திருமுருகன்பூண்டி இறைவனைத் தரிசித்து திருவருள் பெற்று வாருங்களேன்!
Comments
Post a Comment