பஞ்சகடம்ப தலங்கள்

                                                                                                   
நிறைந்த கார்த்திகை அமாவாசை திருநாளில் தோஷங்கள் அனைத்தும் விலக்கி அருளும் கடம்பன் பூஜித்த நாகப்பட்டினம் மாவட்டம் பஞ்ச கடம்ப தலங்கள்

 
பஞ்ச கடம்ப தலங்கள்:
முருகப்பெருமான் நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கலில் வேல் வாங்கி சூரபத்மனை சம்ஹாரம் செய்ததால் வீரஹத்தி தோஷம் ஏற்பட்டது. அந்த தோஷத்தைப் போக்க, தந்தை சிவபெருமானின் ஆணைக்கேற்ப, முருகப்பெருமான் சிக்கலுக்கு அருகில் உள்ள தேவாரப் பாடல் தலமான கீழ்வேளூர் தலத்தில் சிவபூஜை செய்து, அத்தலத்தை சுற்றியுள்ள 9 தலங்களில் நவலிங்கங்களைப் பிரதிஷ்டை செய்து அங்கும் பூஜித்து, தோஷம் நீங்கப் பெற்றார். அவற்றில் மிக முக்கியமான ஐந்து தலங்கள், பஞ்சகடம்ப திருத்தலங்கள் எனச் சிறப்பிக்கப்படுகின்றன. 

கந்தா! கடம்பா! என்றழைக்கப்படும் முருகப்ப்ருமானுக்குக் கடம்ப மலர்கள் மீது பிரியம் அதிகம். ஆகவே, கந்தனைக் ‘கடம்பன்’, ‘நம் கடம்பன்’ என்று சமயக் குரவர்களும், `கந்தக்கடம்பன்' என்று அருணகிரிநாதரும் போற்றுகின்றனர். அவ்வகையில், பஞ்ச கடம்ப கோவில்கள் கடம்பனின் புகழைத் தாங்கி திகழ்கின்றன. 

கந்தப்பெருமானே தன்னுடைய கஷ்டம் நீங்க வணங்கிய பஞ்ச கடம்பத் தலங்கள் 
1.கோயில்கடம்பனூர், 2.ஆழிக்கடம்பனூர்(ஆழியூர்), 3.இளங்கடம்பனூர், 4.பெருங்கடம்பனூர், 5.கடம்பர வாழ்க்கை. இந்தத் தலங்களை பக்தர்கள் தரிசித்தால் நாக தோஷம், களத்தர தோஷம், புத்திர தோஷம், காலசர்ப்ப தோஷம் உள்ளிட்ட எல்லா தோஷங்களும் நீங்கப்பெறலாம் என்பது ஐதிகம்.

குறிப்பு: மூலவர், சிறப்புகள், பிரார்த்தனை, இருப்பிடம், குருக்கள் பெயர், தொடர்பு எண் தனித்தனியாக தருவிக்கப்பட்டுள்ளன.

1.கோயில்கடம்பனூர்:
மூலவர்: சௌந்தரநாயகி சமேத கைலாசநாதர்.
தலச்சிறப்புகள்: வீரஹத்தி தோஷம் தீர முருகவேள் முதலாவதாக வழிபட்ட தலம் இது. இங்கே ஸ்ரீசௌந்தரநாயகி சமேத ஸ்ரீகைலாச நாதரையும் பிரதிஷ்டை செய்ததுடன், முருகப்பெருமான் பாதாள கங்கை என்னும் தீர்த்தத்தையும் உருவாக்கி வழிபட்டார் முருகப்பெருமான். இன்றும் இத்தலம் கோயில்கடம்பனூர் என்றழைக்கப்படுகிறது. இருப்பிடம்: நாகை-திருவாரூர் சாலையில் அகரக் கடம்பனூர் பேருந்து நிலையத்தில் இறங்கினால், 1/2 கிமீ தொலைவில் உள்ளது. தொடர்பு: தண்டபாணி குருக்கள் - 97893 15545.

2.ஆழிக்கடம்பனூர்(ஆழியூர்)
மூலவர் : ஸ்ரீதருணேஸ்வரி சமேத ஸ்ரீசதுர்வேதபுரீஸ்வரர்
தலச்சிறப்புகள்: சிவகங்கை தீர்த்தத்தை உருவாக்கி, ஸ்ரீதருணேஸ்வரி சமேத ஸ்ரீசதுர்வேதபுரீஸ்வரர் என்ற திருப்பெயரில் அம்மையப்பரை வேலவன் பிரதிஷ்டை செய்து வழிபட்ட தலம். ஆழிக்கடம்பனூர் இன்று ஆழியூர் என்றழைக்கப்படுகிறது. இருப்பிடம்: நாகை-திருவாரூர் சாலையில் ஆழியூர் பேருந்து நிறுத்தம் அருகே உள்ளது. தொடர்பு: பாலகிட்டு குருக்கள் – 80566 57148.

3.இளங்கடம்பனூர்:
மூலவர் : ஸ்ரீசௌந்தரநாயகி சமேத ஸ்ரீசோளீஸ்வரர்.
தலச்சிறப்புகள்: ஸ்ரீசௌந்தரநாயகி சமேத ஸ்ரீசோளீஸ்வரரை ஸ்தாபித்து, சரவணப்பெருமான் சிவபெருமானை பூஜித்து இளைப்பாறிய தலம். இங்குள்ள அம்பிகையை வழிபட்டால், நம் வாழ்வை அழகிய வண்ணமாய் மாற்றியருள்வாள். ஈஸ்வரன் நாம் கேட்கும் வரங்களை வாரி வழங்குவார் என்கிறார்கள் பக்தர்கள். இருப்பிடம்: நாகை -திருவாரூர் சாலையில் ஆழியூரில் இறங்கி வடக்கே 4 கிமீ தூரம் பயணித்தால், இளம்கடம்பனூரை அடையலாம். ஆட்டோ வசதியுண்டு. தொடர்பு: பாலசுப்பிரமணிய குருக்கள் - 86087 1782).

4.பெருங்கடம்பனூர்:
மூலவர் : ஸ்ரீசுந்தகேசி அம்பிகை சமேத ஸ்ரீசோமநாதர்
தலச்சிறப்புகள்: நாயன்மார்களில் ஒருவரான கோட்செங்கட்சோழன் கட்டிய மாடக்கோயில் இதுவாகும். முருகப்பெருமான் : ஸ்ரீசுந்தகேசி அம்பிகை சமேத ஸ்ரீசோமநாதர் பிரதிஸ்தை செய்து பூஜை செய்த தலம்.  இத்தல இறைவனுக்கு `முழுமதி சூடி உடனுறை நான்மறையூரார்' என்ற திருப்பெயருமுண்டு. இந்த ஊர் எல்லையில், முருகனுக்குக் காவலராக வந்த பைரவர் வீற்றிருக்கிறார். ஜாதகத்தில் சந்திர பலம் பெறவிரும்பும் அன்பர்கள் இந்தச் சோமநாதரை வழிபடலாம். இருப்பிடம்: நாகை-திருவாரூர் சாலையில் ஆழியூரில் இறங்கி, வடக்கே 4 கிமீ தொலைவு பயணித்தால் பெருங்கடம்பனூரை அடையலாம். ஆட்டோ வசதியுண்டு. தொடர்பு: கல்யாண குருக்கள் - 74023 86582.

5.கடம்பர வாழ்க்கை:
மூலவர் : ஸ்ரீவிசாலாட்சி சமேத ஸ்ரீவிஸ்வநாதர்
தலச்சிறப்புகள்: இறைவன் ஸ்ரீவிசாலாட்சி சமேத ஸ்ரீவிஸ்வநாதர், தான் கொண்டிருக்கும் திருப்பெயருக்கு ஏற்ப, நம் பாவங்களையெல்லாம் போக்குபவர் என்பது பக்தர்களின் நம்பிக்கை. சுவாமிக்கு ஸ்ரீசகளநாதர் என்றும் ஒரு திருப்பெயரும் உண்டு. அதேபோல், அம்பிகை விசாலாட்சிக்கும் ஸ்ரீலோகாம்பாள் என்றொரு திருப்பெயர் உண்டு. இருப்பிடம்: நாகை-திருவாரூர் சாலையில் ஆழியூரில் இறங்கி, வடக்கே 2 கிமீ தொலைவு பயணித்தால் கடம்பர் வாழ்க்கையை அடையலாம். ஆட்டோ வசதியுண்டு. தொடர்பு: சுரேஷ் குருக்கள்-87608 88429.

முருகனின் தவம்:
நவலிங்க பூஜையை முடித்தபின், முருகன் கீழ்வேளூர் ஸ்ரீஅட்சயலிங்க சுவாமி கோயிலின் முன் தன் வேலால் பூமியில் குத்தி சரவணப்பொய்கை தீர்த்தத்தை உண்டாக்கி நீராடினார். பின்னர், இலந்தை மரத்தினடியில் சுயம்பு லிங்கமாக அருளும் அட்சயலிங்கப் பெருமானை வழிபட்டு, வடதிசை நோக்கி நின்ற கோலத்தில் தவத்தைத் தொடங்கினார். அவருடைய தவத்தைக் கலைக்கும் வண்ணம் வீரஹத்தி பெரும் இடையூறு விளைவித்தது.

அஞ்சுவட்டத்தம்மன்:
முருகனின் அல்லல் அகற்ற பத்ரகாளி அவதாரம் எடுத்த அம்பிகை, அஞ்சுவட்டத்தம்மன் எனும் திருநாமத்துடன் கீழ்வேளூரில் கோயில் கொண்டிருக்கிறாள். இவளை வழிபட்டால் திருமணத்தடை, தொழில் பிரச்னைகள், கிரக தோஷங்கள் உள்ளிட்ட பிரச்னைகள் நீங்கும்; புத்திரபாக்கியம் வாய்க்கும் என்கிறார்கள்.

முருகனுக்கு உதவியாக தாய் சுந்தரகுஜாம்பிகை அஞ்சுவட்டத்தம்மனாக எழுந்தருளி, நான்கு திசைகளோடு ஆகாயத்தையும் சேர்த்து ஐந்து புறங்களிலும் காவலாகி நின்று வீரஹத்தியை விரட்டியடித்தாள். முருகப்பெருமானும் மனநிறைவுடன் தவத்தைப் பூர்த்தி செய்து வீரஹத்தி தோஷம் நீங்கப் பெற்றார்.

கடம்பன் பூஜித்த நாகப்பட்டினம் பஞ்ச கடம்ப தலங்களை தரிசித்து மகிழ்ந்தால் அனைவரின் பாவங்களையெல்லாம் போக்கியருள்வார் ! 

வேலும் மயிலும் துணை! 
திருச்சிற்றம்பலம



Comments

Popular posts from this blog

மதுரை மாவட்டத்தில் உள்ள ஜீவசமாதிகள்

நலம் தரும் நல்வாழ்வு தரும் நான்கு ராமேஸ்வரங்கள்

திருவாஞ்சியம் வாஞ்சிநாதசுவாமி கோயில்