போற்றித்திருவிருத்தம் மற்றும் போற்றிவிண்ணப்பம்
முருகப்பெருமானின் அருள் வழங்கும் போற்றித்திருவிருத்தம் (திருவருட்பா) மற்றும் போற்றிவிண்ணப்பம் (பாம்பன் சுவாமிகள்)
திருச்சிற்றம்பலம்
1. கங்கையஞ் சடைசேர் முக்கட் கரும்பருள் மணியே போற்றி
அங்கையங் கனியே போற்றி அருட்பெருங் கடலே போற்றி
பங்கையன் முதலோர் போற்றும் பரம்பரஞ் சுடரே போற்றி
சங்கைதீர்த் தருளும் தெய்வச் சரவண பவனே போற்றி.
2. பனிப்பற அருளும் முக்கட் பரஞ்சுடர் ஒளியே போற்றி
இனிப்புறு கருணை வான்தேன் எனக்கருள் புரிந்தாய் போற்றி
துனிப்பெரும் பவந்தீர்த் தென்னைச் சுகம்பெற வைத்தோய் போற்றி
தனிப்பெருந் தவமே போற்றி சண்முகத் தரசே போற்றி.
3. மணப்புது மலரே தெய்வ வான்சுவைக் கனியே போற்றி
தணப்பற அடியர்க் கின்பம் தரும்ஒரு தருவே போற்றி
கணப்பெருந் தலைவர் ஏத்தும் கழற்பதத் தரசே போற்றி
குணப்பெருங் குன்றே போற்றி குமரசற் குருவே போற்றி.
4. தவம்பெறு முனிவருள்ளத் தாமரை அமர்ந்தோய் போற்றி
பவம்பெறுஞ் சிறியேன் தன்னைப் பாதுகாத் தளித்தோய் போற்றி
நவம்பெறு நிலைக்கும் மேலாம் நண்ணிய நலமே போற்றி
சிவம்பெறும் பயனே போற்றி செங்கதிர் வேலோய் போற்றி.
5. மூவடி வாகி நின்ற முழுமுதற் பரமே போற்றி
மாவடி அமர்ந்த முக்கண் மலைதரு மணியே போற்றி
சேவடி வழுத்தும் தொண்டர் சிறுமைதீர்த் தருள்வோய் போற்றி
தூவடி வேல்கைக் கொண்ட சுந்தர வடிவே போற்றி
6. விண்ணுறு சுடரே என்னுள் விளங்கிய விளக்கே போற்றி
கண்ணுறு மணியே என்னைக் கலந்தநற் களிப்பே போற்றி
பண்ணுறு பயனே என்னைப் பணிவித்த மணியே போற்றி
எண்ணுறும் அடியார் தங்கட் கினியதெள் அமுதே போற்றி.
7. மறைஎலாம் பரவ நின்ற மாணிக்க மலையே போற்றி
சிறைஎலாம் தவிர்ந்து வானோர் திருவுறச் செய்தோய் போற்றி
குறைஎலாம் அறுத்தே இன்பம் கொடுத்தஎன் குருவே போற்றி
துறைஎலாம் விளங்கு ஞானச் சோதியே போற்றி போற்றி.
8. தாருகப் பதகன் தன்னைத் தடிந்தருள் செய்தோய் போற்றி
வேருகச் சூர மாவை வீட்டிய வேலோய் போற்றி
ஆருகச் சமயக் காட்டை அழித்தவெங் கனலே போற்றி
போருகத் தகரை ஊர்ந்த புண்ணிய மூர்த்தி போற்றி.
9. சிங்கமா முகனைக் கொன்ற திறலுடைச் சிம்புள் போற்றி
துங்கவா ரணத்தோன் கொண்ட துயர்தவிர்த் தளித்தாய் போற்றி
செங்கண்மால் மருக போற்றி சிவபிரான் செல்வ போற்றி
எங்கள்ஆர் அமுதே போற்றி யாவர்க்கும் இறைவ போற்றி.
10. முத்தியின் முதல்வ போற்றி மூவிரு முகத்த போற்றி
சத்திவேற் கரத்த போற்றி சங்கரி புதல்வ போற்றி
சித்திதந் தருளும் தேவர் சிகாமணி போற்றி போற்றி
பத்தியின் விளைந்த இன்பப் பரம்பர போற்றி போற்றி.
11. தெருளுடை யோர்க்கு வாய்த்த சிவானந்தத் தேனே போற்றி
பொருளுடை மறையோர் உள்ளம் புகுந்தபுண் ணியமே போற்றி
மருளுடை மனத்தி னேனை வாழ்வித்த வாழ்வே போற்றி
அருளுடை அரசே எங்கள் அறுமுகத் தமுதே போற்றி.
12. பொய்யனேன் பிழைகள் எல்லாம் பொறுத்திடல் வேண்டும் போற்றி
கையனேன் தன்னை இன்னும் காத்திடல் வேண்டும் போற்றி
மெய்யனே மெய்யர் உள்ளம் மேவிய விளைவே போற்றி
ஐயனே அப்ப னேஎம் அரசனே போற்றி போற்றி
13. முருகநின் பாதம் போற்றி முளரியங் கண்ணற் கன்பாம்
மருகநின் கழல்கள் போற்றி வானவர் முதல்வ போற்றி
பெருகருள் வாரி போற்றி பெருங்குணப் பொருப்பே போற்றி
தருகநின் கருணை போற்றி சாமிநின் அடிகள் போற்றி.
14. கோதிலாக் குணத்தோய் போற்றி குகேசநின் பாதம் போற்றி
தீதிலாச் சிந்தை மேவும் சிவபரஞ் சோதி போற்றி
போதில்நான் முகனும் காணாப் பூரண வடிவ போற்றி
ஆதிநின் தாள்கள் போற்றி அநாதிநின் அடிகள் போற்றி.
15. வேதமும் கலைகள் யாவும் விளம்பிய புலவ போற்றி
நாதமும் கடந்து நின்ற நாதநின் கருணை போற்றி
போதமும் பொருளும் ஆகும் புனிதநின் பாதம் போற்றி
ஆதரம் ஆகி என்னுள் அமர்ந்தஎன் அரசே போற்றி.
#போற்றி_விண்ணப்பம்
#பாம்பன்_சுவாமிகள்
1. ஐயனே அரசே போற்றி அருமறைப் பொருளே போற்றி
துய்யனே துணையே போற்றி தூமணித் திரளே போற்றி
மெய் அருள் விளைவே போற்றி வெற்றிவேல் ஏந்து பூவன்
கையனே போற்றி எங்கள் கடவுளே போற்றி போற்றி
2. போற்று விண்ணவர்கோன் போற்றி புரிதவத் தொண்டர்க்கு இன்பம்
ஆற்றுநல் அழகன் போற்றி ஆடும் அம்பரியோன் போற்றி
நீற்றினைப் புனைந்தமேனி நிலவு அருட்குன்றம் போற்றி
சீற்றம் எம் மேற்கொளா ஓர் சிவசுப்பிரமணியம் போற்றி
3. மணி அணி மால்விரிஞ்சன் மற்று உள கணங்கள் யாவும்
பணிய நின்றவனே போற்றி பரமனே போற்றி அன்பர்
அணி அடி அலரே போற்றி ஆக்கி நன்கு அளித்து மாய்க்கும்
குணம் உடை அத்தா போற்றி குமரவேள் போற்றி போற்றி.
4. போற்றி வந்து ஆளும் உன்றன் பொன் அடிக் கமலம் போற்றி
தேற்றுவார் உன்னை அல்லால் திக்கு வேறு இல்லை போற்றி
மாற்று அரும் பிறவிக் காட்டை மடிக்க மெய்ஞ்ஞானத் தீயை
ஏற்றும் எஃகு உடையாய் போற்றி எங்குறை தவிர்ப்பாய் போற்றி.
5. பாய்நதிக் கிடையோன் வாமபாகமே கொண்டான் தன்னைத்
தாய் என உவந்தாய் போற்றி தனிப் பரஞ் சுடரே போற்றி
வீ இலாப் புத்தேள் மாதை வேட்டு மற்று ஒருத்திக்கு அன்று
நாயகன் ஆனாய் போற்றி நான்மறை முதல்வா போற்றி.
6. முதலுமாய் நாப்பண் ஆகி முடிவுமாய் நின்றாய் போற்றி
சததள பாதா போற்றி சகச்சிர நாமா போற்றி
மதிபுனை பரமனார்க்கு மதலையாய்க் குருவாய்த் தேவர்
பதி என உளவேல் போற்றி பரஞ்சுடர்க் கண்ணா போற்றி.
7. கண்ணுமாய்க் கருத்தும் ஆகிக் காண் எழில் எந்தை போற்றி
விண்ணுமாய் மண்ணும் ஆகி விளங்கு அருள் தேவே போற்றி
பண்ணவர்க்கு அருளத் தண்ட பாணியா நின்றாய் போற்றி
தண் அருள் கடலே போற்றி சதுர் முகற்கு இறைவா போற்றி
8. இறைவனே போற்றி ஆதி எந்தையே போற்றி வேலுக்கு
இறைவனே போற்றி நீப இணர் அணி சிவனே போற்றி
மறைபுகல் அறிய எங்கண் மாதவ மணியே போற்றி
குறைவு அறு நிறைவே போற்றி குளிர்சிவக் கொழுந்தே போற்றி
9. கொழுமையில் குளிர்மை போற்றி குக்குடக் கொடியாய் போற்றி
குழுமிய சிவகணங்கள் கும்பிடும் கழலாய் போற்றி
தொழுபவர்க்கு அருள்வோய் போற்றி சுந்தர போற்றி என்னை
முழுதும் ஆள்பவனே போற்றி மோனநாயகனே போற்றி
10. நாயகம் ஆனார்க்கு எல்லாம் நாயகம் ஆனாய் போற்றி
தாய் என வருவாய் போற்றி சண்முகத்து அரசே போற்றி
தீ அரிப் பெயரோர்க்கு அன்று தெய்வமும் குருவும் ஆன
நீ எனைக் கலந்து ஆள் போற்றி நித்தனே போற்றி போற்றி
---
Comments
Post a Comment