சொக்கநாதர் இரவில் தங்க மாட்டார்
.
ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் பிறந்தவுடன் வசந்த ருது தொடங்கிவிடும். சித்திரையும் வைகாசியும் வசந்த ருதுவிற்கான மாதங்களாகும். ஆனால் பங்குனி மாதத்தின் பிற்பாதியிலேயே வசந்தத்தின் அறிகுறிகள் தோன்றிவிடும். இலைகளை உதிர்த்த மரங்கள் அனைத்தும் துளிர் விட்டுப் பூக்க ஆரம்பிக்கும். பங்குனி, சித்திரை மாதங்களில் அநேகமாக அனைத்து ஆலயங்களிலும் பிரம்மோற்சவம் நடைபெறும். குறிப்பாக பங்குனி உத்திர நாளன்று சிவாலயங்களிலும், வைணவ ஆலயங்களிலும் திருக்கல்யாண உற்சவங்களை நடத்துவர். முருகப் பெருமான் ஆலயங்களிலும் பங்குனி உத்திரத் திருவிழா மிகச் சிறப்பாகும்.
ஒருகாலத்தில் மதுரை மீனாட்சி அம்மன்- சொக்கநாதர் ஆலயத்தில் பங்குனி உத்திரத்திருவிழா, கோடை வசந்தத் திருவிழாவாக பத்து நாட்கள் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வந்துள்ளது. இந்த நன்னாளில் மீனாட்சியம்மன் - சுந்தரேஸ்வரர் இருவரும் மதுரைக்கு அருகில் சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருப்பூவனம் சிவாலயத்திற்கு காலையில் திரு உலாச்சென்று இரவிற்குள் திரும்பி வருவது வழக்கம். திருப்பூவனம் பாண்டி நாட்டுப் பாடல் பெற்ற 14 தலங்களில் ஒன்றாகும். மூவர் பாடல் பெற்ற தலமான இத்தலத்தில் சிவபெருமான் புஷ்பவன நாதர் (பூவன நாதர்) என்ற பெயரில் தேவி சௌந்தர நாயகி (மின்னனையாள்) சமேதராகக் காட்சி தருகிறார்.திருப்பூவனத்தில் வசித்து வந்த பொன்னனையாள் என்ற பெண்மணி சொக்கநாதரின் தீவிர பக்தையாகத் திகழ்ந்தாள். அப்போது அவள் நாள்தோறும் ஆலயத்திற்குச் சென்று, திருப்பூவனத்தில் எழுந்தருளியிருக்கின்ற ஆடலரசனான நடராஜரின் சிலையைப் பார்த்துப் பரவசப்படுவாள். இந்த நடராஜர் விக்ரகம் மிகப் பெரியதும், கலை நுணுக்கம் மிக்கதுமான அரிய பஞ்சலோகச் சிலையாகும்.
அந்த அழகிய சிலை சொக்கத் தங்கத்தினால் செய்யப்பட்டால் எவ்வளவு அழகாக இருக்கும் என்று கற்பனை செய்து பார்ப்பதுண்டு. அவள் ஆசை நிறைவேறும் அளவிற்கு அவளிடம் பொருள் வசதி கிடையாது. ஆனால் ஒவ்வொரு நாளும் சிவபெருமானிடம் தன் ஆசையைக் கூறி வேண்டி வந்தாள். தன் பக்தையின் வேண்டுகோளுக்குச் செவி சாய்த்த சிவபெருமான், அவள் முன்பாக சித்தர் வடிவில் வந்து அவளுக்குத் தேவையான தங்கத்தை ரசவாதம் செய்து அளித்தார். பொன்னனையாளின் ஆசையும் நிறைவேறியது.தன்மீது அளவிலாத பக்தி கொண்ட பக்தை பொன்னனையாளுக்கு சிவபெருமான் மீனாட்சியுடன் தரிசனம் கொடுத்த நாள் பங்குனி உத்திர நாளாகும். அதனால் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திர நாளில் மீனாட்சி - சொக்கநாதர் திருப்பூவனத்திற்குச் சென்று திரும்புவது வழக்கமாக இருந்தது. அந்தக் காலகட்டத்தில் திருப்பூவனத்தை அடைய வைகை யாற்றில் இறங்கியே செல்ல வேண்டும். நாள் முழுவதும் திருப்பூவனத்தில் இருந்துவிட்டு மீனாட்சியும் சொக்கநாதரும் இரவில் அர்த்தஜாம பூஜைக்கு மதுரை ஆலயத்திற்குத் திரும்பிவிடுவது மரபாக இருந்தது. இந்த நிலையில் தினமும் மீனாட்சி ஆலயத்தின் அர்த்தஜாம பூஜை மணி ஒலி கேட்ட பின்னரே திருமலை மன்னர் உறங்கச் செல்வது வழக்கம்.
அப்படி ஒரு பங்குனி உத்திர நாளன்று மீனாட்சி - சொக்கேசர் திருப்பூவனம் எழுந்தருளிய பின், வைகை ஆற்றில் வெள்ளம் கரை புரண்டோடியது. சொக்கரை எப்படி யாவது மதுரைக்கு எழுந்தருளச் செய்து, அர்த்தஜாமப் பூஜையைத் தரிசிக்க ஆவல் கொண்டார் மன்னர். உடனடியாக ஊரில் முரசறைந்து "வெள்ளம் கரை புரண்டோடும் வைகையாற்றில் மீனாட்சியையும் சொக்கரையும் பத்திரமாகக் கரை சேர்த்து ஆலயத்திற்குக் கொண்டு வந்து சேர்ப்பவர்களுக்குத் தக்க சன்மானம் வழங்கப்படும்" என்று அறிவித்தார். ஒரு சில வீரர்கள் ஆற்று வெள்ளத்தில் குதித்து வைகையை நீந்திக் கடந்து, மீனாட்சி- சொக்கநாதர் சிலைகளை வாகனத்தோடு தூக்கிக்கொண்டு நீந்தி, மிகவும் பத்திரமாக மதுரைக்குக் கொண்டு சேர்த்தனர். அர்த்த ஜாமப் பூஜையும் தடையின்றி முறையாக நடைபெற்றது.
இதுகண்டு மனம் மகிழ்ந்த திருமலை மன்னர் மீனாட்சியையும் சொக்கரையும் வெள்ளத்தில் நீந்தி பத்திரமாகக் கொண்டு வந்தவர்களுக்கு ஒரு கிராமத்தையே பரிசாக அளித்தார். அர்த்தஜாமப் பூஜை தடையின்றி நடக்க உதவியதால் அந்தக் கிராம் சாமநத்தம் என்று அழைக்கப்படலாயிற்று. இதுபோன்று ஓரிரு முறை வைகை ஆற்றில் வெள்ளம் வரவே, திருமலை மன்னர் ஆட்சிக்குப் பின்னர் தொலைவில் உள்ள திருப்பூவனத்திற்கு எடுத்துச் செல்வதற்குப் பதிலாக, மதுரைக்கு அருகில் வைகை ஆற்றின் கரையில் உள்ள திருவாப்பனூர் திருவாப்புடையார் ஆலயத்திற்கு எடுத்துச் செல்லும் வழக்கம் ஏற்பட்டது. இந்த திருவாப்புடையார் ஆலயமும் ஒரு பாடல் பெற்ற தலமாகும். சோழாந்தகன் என்ற பாண்டிய மன்னனின் பொருட்டு சிவபெருமான் ஓர் ஆப்பு உருவில் வெளிப்பட்ட தலம் இது.மதுரை மீனாட்சி - சொக்கேசர் ஆலயத்தில் பங்குனி உத்திர நாளோடு முடிவடையும் கோடை வசந்த விழா (பங்குனிப் பெருவிழா) பத்து நாட்கள் நடைபெறுகிறது. பத்தாவது நாளான பங்குனி உத்திர நாளன்று மீனாட்சி சொக்கேசர் திருவாப்பனூருக்கு எழுந்தருளி, பக்தியில் சிறந்த பொன்னனையாளுக்கு காட்சி நல்கும் லீலை நடைபெறுகிறது.
திருமலை மன்னன் சிவபெருமானின் அர்த்தஜாமப் பூஜை ஒலி கேட்கும் பொருட்டு, இரவில் தங்காது மதுரைக்கு சொக்கநாதப் பெருமான் திரும்பியதால் "சொக்கர் ராத்தங்கார்" (சொக்கநாதர் இரவில் தங்க மாட்டார்) என்ற பழமொழியே ஏற்பட்டுவிட்டது. இப்போதும், மதுரையை அடுத்துள்ள தங்கள் ஊர்களுக்கு- குறிப்பாக திருப்பூவனம், சாமநத்தம் போன்ற ஊர்களுக்கு மணமான பெண்கள் சென்றால் அங்கு இரவில் தங்காமல் மதுரைக்குத் திரும்பிவிடுவர். வற்புறுத்திச் சொன்னாலும் ஏதோ காரணம் கூறி புறப்பட்டு விடுவர். மூதாட்டிகள் இது கண்டு, "நீ என்ன மீனாட்சியா? ராத்தங்க மறுக்கிறாயே'' என்று கூறுவதுண்டாம்!
Comments
Post a Comment